சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி பேரூராட்சி 2, 3, 10, 15 ஆகிய வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 84 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, மற்றும் நடுப்பட்டி ஊராட்சி தெற்கத்தியான் காட்டுவளவு பகுதியில் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
காடையாம்பட்டி பேரூராட்சி குழந்தை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் பொற்கொடி வரவேற்றார். காடையாம்பட்டி நகர செயலாளர் பிரபாகரன், பேரூராட்சி தலைவர் குமார் துணைத்தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல் நடுப்பட்டி தெக்கத்தியான் காடு பகுதியிலும், தார் சாலை அமைக்கும் பணிைய அவர் தொடங்கி வைத்தார்.