சேலம் மாவட்டம் ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வட்டார அளவில் கல்விக்கடன் முகாம் நேற்று(செப்.19) நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: -
சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் தேவைப்படும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வட்டார அளவில் கல்விக்கடன் மேளாக்கள் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 2023- 24 ஆண்டில் 5,773 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 89.1 கோடி கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 7 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 99 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேச்சேரி வட்டாரத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் வருகிற 24-ந் தேதி தாரமங்கலம் கைலாஷ் மகளிர் கல்லூரியில் வட்டார அளவிலான கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை கல்விக் கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முன்னதாக முகாமில் கல்விக்கடன் கேட்டு 70 மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். அவற்றை வங்கி அதிகாரிகள் பரிசீலனை செய்து கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.