வீடு, சாலைகளில் மண்எண்ணெய் குண்டுகள் வீசிய 6 பேர் கைது

556பார்த்தது
வீடு, சாலைகளில் மண்எண்ணெய் குண்டுகள் வீசிய 6 பேர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாரணம்பாளையத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் நேற்று முன்தினம் மாலை சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றனர். இதனால் அந்த வழியாக சென்ற பெண்கள் மற்றும் மாணவர்கள் அச்சம் அடைந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெண்கள், மாணவர்கள் பயப்படுவதால் மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு அவர்களிடம் கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்களில் 2 பேர் அப்பகுதி மக்களிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்றனர். பின்னர் இரவு 8 மணிக்கு 2 மோட்டார் சைக்கிளில் 6 வாலிபர்கள் அப்பகுதிக்கு வந்து பொதுமக்களிடம் மீண்டும் தகராறு செய்தனர். இதையடுத்து 2 வாலிபர்கள் பாட்டில்களில் நிரப்பி கொண்டு வந்த மண்எண்ணெய் குண்டுகளை பொதுமக்கள் சிலரது வீட்டின் சுவற்றிலும், சாலையிலும் வீசினர். இதனால் சாலையில் குபீர் என தீப்பிடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி காமலாபுரம் கலர்காடு பகுதியை சேர்ந்த விஸ்வா என்கிற விசுவநாதன் (வயது 20), அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (19), காமலாபுரம் கல்கொடி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (21), கருப்பூர் குள்ளகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சாரதி (19) மேலும் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி