கெங்கவல்லி தாலுகாவிற்குட்பட்ட, உலிபுரத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அதே போன்று தம்மம்பட்டியில் 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. போட்டிகள் நடைபெறும் இடங்களை கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: -
இந்த போட்டிகளில் தலா 600 காளைகள், தலா 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டிகள் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான தடுப்பு வேலிகள், பாதுகாப்பு, தடுப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள், தகுதி சான்று வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களின் உடல்களை பரிசோதனை நடத்தி தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடை டாக்டர்கள், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதித்து தகுதி சான்று வழங்க வேண்டும். பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.