சேலம் மாநகர பகுதியில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளிலேயே கைத்தறி மற்றும் விசைத்தறி இயந்திரங்களை நிறுவி ஜவுளி தொழில் செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். கொரோனாவை தொடர்ந்து சூரத்தில் இருந்து அதிகளவில் ஜவுளி ரகங்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக உள்ளூர் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் 60% வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தினர் தறிக்கூடங்களுக்கு 200 சதவீதம் வரை வணிகவரி விதித்து வருவதால் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக சேலம் கருங்கல்பட்டி பகுதியில் அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வணிக வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றினர். இது தொடர்பாக சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கும் நெசவாளர்கள் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர் வேலை நிறுத்தம், உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.