சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டியில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அரசு அனுமதியின்றி அ. தி. மு. க. கொடிக்கம்பம் நேற்று முன்தினம் இரவு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்ககிரி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கார்த்திகா, சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தாசில்தார் அறிவுடைநம்பி உத்தரவின்பேரில் மண்டல துணை தாசில்தார் சாஜிதாபேகம், தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் மலர், தமிழ்முருகன், செந்தில்குமார், அருள்முருகன், கருப்பண்ணன், சண்முகம், கமலக்கண்ணன், உள்ளிட்ட வருவாய் துறையினர், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் அரசிராமணி பேரூராட்சி நிர்வாகத்தினர் புதிதாக கொடிக்கம்பம் நடப்பட்ட பகுதிக்கு சென்றனர். அங்கு அனுமதியின்றி நடப்பட்ட அ. தி. மு. க. கொடிக்கம்பம் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
இதையொட்டி சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, தேவூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவில் நிலத்தில் அரசியல் கட்சியினர் கொடிக்கம்பம் வைத்தால் மற்ற கட்சியினரும் கொடிக்கம்பம் வைப்பார்கள் என்பதாலும், அரசியல் கட்சியினர் இடையே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதாலும் கொடிக்கம்பத்தை அகற்றினோம் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.