நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 64). இவருக்கு திருமணம் ஆகி 2 மகன், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதற்கிடையே ஜீவானந்தம், பஸ்சில் பயணம் செய்த போது நர்சு ஒருவரை பார்த்துள்ளார். அந்த நர்சு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற ஜீவானந்தம், நர்சிடம் தன்னுடைய செல்போன் எண்ணை கொடுத்து தன்னை அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்படி தனது செல்போன் எண்ணுக்கு அழைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் நர்சை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த நர்சு பணியில் கவனம் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் அபண்யா, நர்சை சமாதானப்படுத்தியதுடன், நடந்த விவரங்களை தேவூர் போலீசில் புகாராக அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி ஜீவானந்தத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.