பெண்கள் தடம் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு புதிய வெளிச்சத்தை நோக்கி கனவுகளுடன் பயணித்து வருகின்றனர். "மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்" - என போற்றும் தமிழ்நாட்டில் பெண்கள் வெற்றியில் கோலோச்சுகின்றனர்.
இப்படியான சூழலில் கூட சிவகங்கை போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் பெண்கள் தொழில்சார்ந்து வெளியே வருவது கூட கடினமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குடும்ப நிலையை சுகமாக சுமக்க பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநராக ஜொலிப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்ற மாற்றுத்திறனாளிப் பெண் தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க ஆட்டோ ஓட்டி வருகிறார். சுந்தரியின் வயது 33. அவர் சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ வரை படித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு சுரேந்திரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பவனிகா (4), ஸ்ரீ ரிஷிகேசவ் (7) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆறு வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து குழந்தைகளை வளர்த்து வருகிறார்.
கடன் உதவி பெற்று ஆட்டோ ஓட்டி குழந்தைகளை வளர்க்கிறார். தினமும் 1000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.ஆட்டோ கடன், டீசல் செலவு போக 500 ரூபாய் தான் மிஞ்சுகிறது. தனது தாய் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.
அரசு வேலை கிடைத்தால் உதவியாக இருக்கும் எனவும் தட்டச்சு கூடுதலாக கற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆட்டோ ஓட்டி செல்லும் பொழுது ஆண்களால் பல தொல்லைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார். ஆனாலும் இதையெல்லாம் தாண்டி வாழ்க்கையை வெற்றியடைய வேண்டும் என உழைத்து வருகிறார். தன் குழந்தைகளும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பது அவரது ஆசை. அதனால் குழந்தைகளிடம் சிரித்தபடி வலியை மறைத்து அவர்கள் கல்விக்காகவும் சிரத்தை எடுக்கிறார்.