தேவிபட்டினம் கடற்கரையில் கடல் அட்டைகள் பறிமுதல்.!

68பார்த்தது
ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல் வளத்தை காக்கும் துாய்மை காவலர்களாக கடல் அட்டைகள் விளங்குகின்றன. அழிந்து வரும் அரியவகை பட்டியலில் உள்ளதால் கடல் அட்டைகளை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மருத்துவ குணம் உள்ளதாக நினைத்து சிலர் வெளி நாடுகளுக்கு கடத்துகின்றனர்.

பச்சை கடல் அட்டை கிலோ, 2, 000, வேக வைத்து காய வைத்த கடல் அட்டைகள் கிலோ, 10, 000 ரூபாய் வரை வெளி மார்க்கெட்டில் விலை போகிறது. இதனால் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், கீழக்கரை, தேவிப்பட்டினம், திருப்பாலைக்குடி, மோர்பண்ணை, அழகன்குளம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தடையை மீறி சிலர் கடல் அட்டைகளை பிடிக்கின்றனர்.

இதை தடுக்க வனப்பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை தேவிப்பட்டினம் நவபாஷாண நவக்கிரக கோவில் அருகே வனப்பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற போது சாக்கு பையுடன் டூ வீலரில் வந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது பையில் 67 கிலோ பச்சை கடல் அட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து தேவிப்பட்டினம் ஜலீல் ரகுமான், 35, என்பவரை பிடித்து கடல் அட்டைகளுடன் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஜலீல் ரகுமானை கைது செய்து, யாரிடம் விற்க கொண்டு சென்றார் என வனச்சரகர் திவ்யலட்சுமி, பாரஸ்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி