பொதுமக்களின் பல நாள் கோரிக்கையை அடுத்து மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் முக்கிய இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. இங்கு அனைத்து துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்கள், காவல்துறை தலைமை அலுவலகங்கள், உயர் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவ கல்லூரி தலைமையிட மருத்துவமணை உள்ளிட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசுகளின் தலைமை அலுவலகங்கள் முதல் அனைத்து அலுவலகங்கள், வணிகம், கல்வி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாதலங்கள், ரயில், பஸ் போக்குவரத்திற்கான மையப்பகுதியாகவும் ராமநாதபுரம் உள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து மிகுந்த இச்சாலைகளில் தானியங்கி சிக்னல் கிடையாது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வந்தாலும் கூட, வாகன நெரிசல் குறையவில்லை. எனவே முக்கிய வழித்தடங்களில் தானியங்கி சிக்னல் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரனில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது முதற்கட்டமாக புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மருத்துவமனை சாலையில் தானியங்கி எஸ். இ. டி சிக்னல் அமைக்கப்பட்டது. அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.