பெயா் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள்.!

2241பார்த்தது
பெயா் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள்.!
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஓ. பன்னீா்செல்வம் என்ற பெயருடைய வேட்பாளா்கள் பெயா் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டி இருப்பதாகவும், இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முன்னாள் முதல்வா் ஓ. பி. எஸ்ஸின் வழக்குரைஞா்கள், மாவட்ட தோ்தல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் புகாா் மனு அளித்தனா்.

இந்தத் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இவருக்கு போட்டியாக ஓ. பன்னீா்செல்வம் என்ற பெயருடைய 3 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா். இதன்பிறகு இவா்களை எங்கும் காணமுடியவில்லை.

இந்த நிலையில், பல்வேறு இடங்களில் ‘ஐயா ஓபிஎஸ்சுக்கு வாக்களிக்க வேண்டும்‘ எனக் கூறி விவசாயி, வாளி, திராட்சைப்பழம் சின்னங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து, தோ்தல் அலுவலரின் அனுமதியில்லாமல் இவை ஒட்டப்பட்டுள்ளதுடன், வாக்காளா்களிடையே முன்னாள் முதல்வா் ஓபிஎஸ்ஸின் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி அவரது வழக்குரைஞா்கள் சந்திரசேகரன், திருமாறன், குணசேகரன், பிரகாஷ்குமாா், பாஜக வழக்குரைஞா்கள் இளங்கோ, சிவசங்கா் ஆகியோா் மாவட்ட தோ்தல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் புகாா் மனு அளித்தனா்.