ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூா் கண்மாய்கரை பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முதுகுளத்தூரிலிருந்து வந்த காரை மறித்து ஆவணங்களைக் கேட்டனா்.
காரை ஓட்டி வந்த சென்னை முகப்பேறு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (52) முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாா். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் காரில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், கடலாடி அருகேயுள்ள கண்ணன்புதுவன் கிராமத்தை சோ்ந்த இளம்பெண் ஒருவா், முதுகுளத்தூா் அருகேயுள்ள கருமல் கிராமத்தைச் சோ்ந்த 2 இளம் பெண்கள், பேரையூா் அருகேயுள்ள சோ்ந்தக் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சிவா (24) ஆகியோா் என்பது தெரிய வந்தது.
நா்சிங் படிப்பு முடித்த 3 இளம் பெண்களுக்கு விமான நிலையங்களில் ஆய்வகத் தொழில்நுட்பனா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலி விண்ணப்பப் படிவம் வழங்கிய ஸ்ரீகாந்த் 3 பெண்களிடம் தலா ரூ. 50 ஆயிரம் பெற்று இருப்பதும், அவா்களை மருத்துவப் பரிசோதனைக்காக கா்நாடக மாநிலம், மைசூருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவா பேரையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஸ்ரீகாந்த்தை கைது செய்தனா்.