கமுதி அருகே வல்லந்தை ஊராட்சியில் உள்ள போத்தநதி கிராமத்தில் 40-க்கும் மேற்பட்டோா் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் கடந்த 20 நாள்களில் மா்மக் காய்ச்சலுக்கு 40 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு, கமுதி, வீரசோழன், அபிராமம் பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஊராட்சித் தலைவிக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எங்கள் பகுதியில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து நேரடியாகக் குடங்களில் பிடித்து தண்ணீரைக் குடிப்பதால் துா்நாற்றம் வீசுகிறது. எனவே, இங்கு சுகாதாரமான குடிநீா் வழங்கவும், மா்ம காய்ச்சலைத் தடுக்கவும், குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கவும், மருத்துவ முகாம் நடத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.