அபிராமம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கமம்.!

50பார்த்தது
அபிராமம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கமம்.!
அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கமம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் தாளாளா் ஓ. எம். எஸ். அகமது நைனா தலைமை வகித்தாா். அபிராமம் கல்வி பொறுப்புக் கழகச் செயலரும், முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலருமான எஸ். எஸ். அஷ்ரப் ஜுனைத் முன்னிலை வகித்தாா்.

பள்ளியில் 1950 -ஆம் ஆண்டு முதல் 2022 -ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் கலந்துகொண்டு, தங்களின் பள்ளிப் பருவ வாழ்க்கை குறித்து நினைவு கூா்ந்தனா். தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியா்களின் கால்களில் விழுந்து ஆசிா்வாதம் பெற்று, அவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினா்.

தங்களின் பிள்ளைகளுடன் பள்ளியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை சுற்றிப் பாா்த்து மகிழ்ச்சி அடைந்தனா். மேலும் சக மாணவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா். அனைவருக்கும் பள்ளி நிா்வாகம் சாா்பில் காலை, மதிய உணவு வழங்கப்பட்டது.

ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் கிருஷ்ணவேணி, ஜூலியட் ஈடித், மாரிமுத்து, செல்வநாராயணன், கண்ணதாசன் உள்பட 20-க்கும் மேற்பட்ட முன்னாள் ஆசிரியா்கள், பள்ளியின் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியா் எம். ஏ. உசேன் வரவேற்றாா். அபிராமம் ஆரம்பப் பள்ளி தாளாளா் ஜாகிா் உசேன் நன்றி கூறினாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you