பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (16.09.2024) ஏற்றுக் கொண்டனர்.
தமிழக அரசு தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்க ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வருகின்ற செப்டம்பர் 17ஆம் நாள் செவ்வாய் கிழமை அன்று மிலாடி நபி அரசு விடுமுறை நாளாக இருப்பதனால் வேலை நாளான இன்று (16.09.2024) சமூக நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது.
” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் – யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்! மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்! சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!" என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.