பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேஸ்வரி(50). இவர் குன்னம் அருகே உள்ள கள்ளம்புதூர் கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விபத்து ஒன்றில் இவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளம்புதூர் கிராமத்திற்கு தனது வீட்டில் இருந்து சென்று வர இயலவில்லை என்றும், கிராமத்திற்கு அருகே உள்ள காலி பணியிடம் உள்ள கிராமங்களில் தனக்கு பணியிடை மாற்றம் வழங்க வேண்டும் என்று கூறி கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார். இதற்காக அவர் போராட்டங்களும், நடத்தி வந்த நிலையில் அதிகாரிகள் அவரது கோரிக்கைக்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அழகேஸ்வரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தபோது, திடீரென தூக்க மாத்திரைகளை ஆட்சியர் முன்னதாகவே விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதனைத்தொடர்ந்து அவரை அங்கிருந்து அலுவலர்களும் காவல்துறையினரும் பத்திரமாக வெளியே அனுப்பி வைத்தனர். தனக்கு பணியிடை மாற்றம் வழங்காததால் மன உளைச்சலில் இருப்பதால் ஆட்சியர் முன்பு, தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதாகவும் தனது கோரிக்கைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.