நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மாமரம் என்ற பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில் வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் புலிக்குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து புலி குட்டியின் உடல் கைபற்றபட்டு கோத்தகிரி லாங்க் வுட் பகுதியில் முதுமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கக்குச்சி கால்நடை உதவி மருத்துவர் ரேவதி ஆகியோர்களால் நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் , வன ஆர்வலர்கள், கோத்தகிரி வனச்சரக அலுவலர் மற்றும் பணியாளர்கள், வனக்குழு தலைவர் ஆகியோர்களது முன்னிலையில், உடற்கூறாய்வு மேற்கொள்ளபட்டது. இறந்திருப்பது பிறந்து சுமார் ஐந்து மாதங்களான ஆண் புலிக்குட்டி என்றும் அதன் விலா எலும்புகள் உடைந்திருப்பதும் உடற்கூறாய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் ஆய்வில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. உடற்கூறாய்வின் இறுதியில் புலிக்குட்டியின் உடல் அப்பகுதியிலேயே எறியூட்டப்பட்டது. புலிக்குட்டி இறப்பு தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை சாவடிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.