நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராம பஞ்சாயத்துக்கள் முனிசிபாலிட்டிகளுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் கிராமம் தொடர்ந்து கிராம பஞ்சாயத்தாக செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள அக்ரஹாரம் கிராம பஞ்சாயத்து பொதுமக்கள், கலெக்டர் உமாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
பள்ளிபாளையம் அருகில் உள்ள, அக்ரஹாரம் கிராம பஞ்சாயத்தில், விவசாயம் சார்ந்த தொழில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தவிர, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திலும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் முனிசிபாலிட்டியுடன் அக்ரஹாரம் கிராம பஞ்சாயத்தை இணைத்தால் விசாயத்திற்கான சலுகைள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் எனவே எங்கள் கிராமம் தொடர்ந்து கிராம பஞ்சாயத்தாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.