ராதாகிருஷ்ணன் நகர் - Dr radhakrishnan nagar

சென்னை: புறநகர் காவல் நிலையம் அமைக்கப்படும்: கமிஷனர் உறுதி

சென்னை: புறநகர் காவல் நிலையம் அமைக்கப்படும்: கமிஷனர் உறுதி

சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நேரில் சென்று, கத்திக்குத்து சம்பவம் நடந்த டாக்டரின் அறை மற்றும் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.  பின்னர் அவர் அளித்த பேட்டி: மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பாக ஆர்எம்ஓ, டைரக்டர்கள், டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து உத்தரவிட்டுள்ளேன்.  டாக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார். நேற்று கூட டாக்டரிடம் 1 மணி நேரம் பேசி இருக்கிறார். இது எதிர்பாராத சம்பவம். சென்னை மாநகரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் என எல்லா இடத்திலும் முதலில் புறநகர் காவல் நிலையங்கள் இருந்தன.  இப்போது காவல் நிலையங்களாக மாற்றி இருக்கிறோம். அதுபோல் காவல் நிலையங்கள் இல்லாத மருத்துவமனைகளில் புறநகர் காவல் நிலையங்கள் அமைத்துள்ளோம். கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகில் புறநகர் காவல் நிலையம் இருக்கிறது. இருந்தாலும் அது சற்று தொலைவில் இருப்பதால், மற்றொரு புறநகர் காவல்நிலையம் மருத்துவமனை வளாகத்தில் அமைத்து கூடுதலாக பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு கமிஷனர் அருண் கூறினார்.

வீடியோஸ்


சென்னை
Nov 14, 2024, 10:11 IST/எழும்பூர்
எழும்பூர்

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை கனமழை வாய்ப்பு

Nov 14, 2024, 10:11 IST
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  நவ. 15-ம் தேதி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.