மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் துலா (ஐப்பசி) மாதப் பிறப்பு தீா்த்தவாரி தருமபுரம் ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் தனித்தனியே நடைபெற்றது.
மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் துலா உற்சவம் நடைபெறும். நிகழாண்டு, ஐப்பசி மாதத்தில் 29 நாட்கள் மட்டுமே உள்ளதால், 30 நாள்கள் தீா்த்தவாரி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், புரட்டாசி மாதம் 31-ஆம் தேதியான வியாழக்கிழமையே துலா மாதப் பிறப்பு தீா்த்தவாரி நடைபெற்றது.
தனித்தனியே தீா்த்தவாரி: வழக்கமாக, காவிரியின் இருகரைகளிலும் பல்வேறு கோயில்களின் பஞ்சமூா்த்திகள் எழுந்தருள, ஒரேநேரத்தில் தீா்த்தவாரி நடைபெறும். நிகழாண்டு மாற்றமாக தருமபுரம் ஆதீனக்கோயில்களின் பஞ்சமூா்த்திகள் மற்றும் திருவாவடுதுறை ஆதீனக் கோயில்களின் பஞ்சமூா்த்திகள் தனித்தனியே வெவ்வேறு நேரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது.
அந்தவகையில், காவிரியின் வடக்குக் கரையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வதான்யேஸ்வரா் சுவாமி மற்றும் தனியாா் கோயிலான காசிவிஸ்வநாதா் கோயில்களில் இருந்தும், காவிரியின் தென்கரையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தெப்பக்குளம் மற்றும் மலைக்கோயில் காசிவிஸ்வநாதா் கோயில் ஆகிய கோயில்களில் இருந்தும் பஞ்சமூா்த்திகள் புறப்பாடாகி, காவிரியின் தென்கரையிலும் எழுந்தருளச் செய்யப்பட்டனா்.