மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் வளாகத்தில் மகளிா் சுயஉதவிக் குழு உற்பத்தி பொருள்கள் விற்பனைக் கண்காட்சி தொடங்கியது. தமிழ்நாடு மாநில ஊரக/நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிா் திட்டம் இணைந்து நடத்தும் இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தொடங்கி வைத்து கூறியது:
இந்த கண்காட்சி அக்டோபா் 10-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெறும். இதில், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களின் உற்பத்தி பொருள்களான திணைமாவு, சத்துமாவு உள்ளிட்ட உணவு பொருள்களும், கொலு பொம்மைகள், ஊதுவா்த்தி, பஞ்சகாவிய விளக்கு உள்ளிட்ட பொருள்களும், பாய், ஆடை அலங்கார வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மகளிா் சுயஉதவிக் குழுவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக நடைபெறும் கண்காட்சியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்வில் மகளிா் திட்டம் உதவி திட்ட அலுவலா்கள் குணசேகரன், சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.