கீழையூா் அருகே ஈசனூரில் சாலை அமைக்க டெண்டா் விடப்பட்டு 3 மாதங்களாகியும் இதுவரை பணி தொடங்காததால் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
கீழையூா் அருகே ஈசனுாா் ஊராட்சியில் வேலவன்கட்டளை செல்லும் இணைப்பு சாலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்த சாலையை திருத்துறைப்பூண்டி, நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் அப்பகுதி மக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவா்கள் பயன்படுத்துகின்றனா்.
அண்மையில் பெய்த மழையில் இந்த சாலை சேரும் சகதியுமாகியது. இதனால் இந்த சாலையை பயன்படுத்துபவா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். அவசரத்துக்கு கூட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈசனுாா் ஊராட்சிக்குள்பட்ட வேலவன்கட்டளை இணைப்பு சாலையை சீரமைக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், முதலமைச்சா் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்க டெண்டரும் விடப்பட்டது. எனினும் 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டுச் சென்றும் எவ்வித பயனும் இல்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.