மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாய்மாமன் பெருவிழா கொண்டாடப்பட்டது.
தாய்க்கு நிகராக உள்ள தாய்மாமனை போற்றும் விதமாக ஆடி 18 தினத்தில் தனது மொத்த பங்களிப்பையும் தரும் தாய்மாமனுக்கு மரியாதை செய்து, அவர்களிடம் ஆசி வாங்கும் மருமகன்கள், அவர்களை வணங்கி தாணியங்களை வழங்கி வருகின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த திருவிழா எட்டாவது ஆண்டாக உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்ப சாமி கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தாய்மாமன்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து, தாய்மாமனிடம் தானியங்களை மருமகன்மார்கள் பெற்று ஆடி பெருக்கில் விதை விதைப்பிற்காக எடுத்து சென்றனர்.
இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்களும், தேனி மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், தென்னிந்திய பார்வட் ப்ளாக் தலைவர் திருமாறன் மற்றும் பார்வட் ப்ளாக் கட்சி தலைவர்களும் பங்கேற்று தங்களது தாய்மாமன்களுக்கு மரியாதை செய்து ஆசி பெற்றனர்.