சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக அம்மா பேரவை சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் நாளை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை இன்று பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
"திமுகவின் 3 ஆண்டு ஆட்சியில் மக்கள் சேவையில் பூஜ்யமாக உள்ளது, 3 ஆண்டுகளில் திமுக விளம்பரத்தில் தான் ராஜ்ஜியமாக உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் களம் அதிமுகவுக்கான தேர்தல் களமாக உள்ளது. கூட்டணியில் இருந்த தேசிய கட்சி மக்களின் ஜீவாதர உரிமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. அதனால் மக்கள் 2 சதவீத வாக்குகளை அதிகம் அளித்துள்ளனர். வான் சாகச நிகழ்ச்சி பார்க்க வாருங்கள் என்று மக்களை முதல்வர் அழைப்பு விடுத்தார், அந்த நிகழ்வில் 15 லட்சம் பேர் பங்கேற்று, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் சுவாசிக்க காற்று கூட இல்லாமல் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு மோசமான நிர்வாகத்தை தமிழ்நாட்டில் யாரும் பார்த்ததில்லை.
விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு,
"மக்கள் நல திட்டங்களை வைத்து தான் மக்களின் வாக்குகள் பெற முடியும், வசீகரத்தை வைத்து மக்களிடம் வாக்குகளை பெற முடியும் என நினைப்பு தமிழக அரசியலில் எடுபடாது. சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை மக்கள் கைவிட மாட்டார்கள்" என கூறினார்.