மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: கோபுரங்களில் சாரம் கட்டும் பணிகள் தொடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு பணிகளையொட்டி, கோபுரங்களைச் சீரமைக்க சாரம் அமைக்கும் பணிகள் தொடங்கின.
கோயிலில் குடமுழுக்குப் பணிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக குடமுழுக்குப் பணிக்காக மாநில
அளவிலான வல்லுநா் குழு அமைக்கப்பட்டு, கடந்த 2022-இல் அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்தக் குழுவுடன், இந்து சமய அறநிலையத் துறையின் மதுரை மண்டல ஸ்தபதி, திருக்கோயில் உதவிக் கோட்டப் பொறியாளா் ஆகியோரும் பங்கேற்று ஆய்வுகள் மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பினா்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் குடமுழுக்குப் பணிகளைத் தொடங்குமாறு அரசு உத்தரவிட்டது.
கோயிலின் வெளிக் கோபுரங்களை வண்ணம் பூசி அழகுபடுத்தும் பணிகளுக்காக 5 கோபுரங்களின் வெளிப் பகுதியிலும் சாரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி முடிந்தவுடன், கோயிலின் வெளிக் கோபுரங்களில் உள்ள சிற்பங்களை சுத்தப்படுத்தி வண்ணம் பூசும் பணிகள் தொடங்கும். படிப்படியாக இந்தப் பணிகள் முடிந்தவுடன், கோயிலின் உள் பகுதிகளிலும் பணிகள் நடைபெறும்.
இந்தப் பணிகள் முடிந்தவுடன் குடமுழுக்கு நடத்தப்படும் தேதி அரசால் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.