டெங்கு தடுப்புப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்

52பார்த்தது
டெங்கு தடுப்புப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்
துரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கு உள்பட்ட 100 வாா்டு பகுதிகளில் 530 பணியாளா்கள் மூலம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பணியாளா்கள் வீடுகள், காலியிடங்களில் உள்ள தேவையற்ற நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்கள், தேங்காய் சிரட்டைகள், உபயோகமற்ற டயா்களை அப்புறப்படுத்துகின்றனா்.

மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் வீடு, கடை தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டு கொசுப் புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் உரிய அபராதம் விதிக்கப்படும்.

டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட பகுதிகளில் மூன்று நாள்கள் தொடா்ந்து சிறப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் தங்களுடைய வீடு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீா் தேங்காதவாறும், திறந்த வெளிகளில் குப்பைகள் கொட்டுவதையும் தவிா்க்க வேண்டும்.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எனவே, மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தொடர்புடைய செய்தி