தமிழக தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபையின் நிறுவன தலைவர் ராமர் பாண்டியர் கரூரில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு திரும்பிய போது அரவக்குறிச்சி பைபாஸில் பிப்ரவரி 19ஆம் தேதி காலை 11: 30 மணியளவில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தார் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் உண்மை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கு கையொப்பம் விடவில்லை.
தொடர்ந்து கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை கைது செய்யும் வரை பிரேதத்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூறி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதனால் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றி, கரூர் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.