கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் வரும் பிப்ரவரி 11, 12 தேதிகளில் தைப்பூச திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் முழு கூடுதல் பொறுப்பு கருணாகரன் தலைமை வகித்தார்.
டிஎஸ்பி செந்தில்குமார், சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், கோவில் செயல் அலுவலர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் எட்டு கோவில்களில் இருந்து அஷ்ட மூர்த்திகள் சந்திப்பு மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற்று, தீர்த்தவாரி மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் நடைபெறுவதால் அனைத்து சுவாமிகள் தாமதம் இன்றி சரியான நேரத்திற்கு தீர்த்தவாரி நடைபெறும் கடம்பன்துறைக்கு வந்து சேர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
சுவாமிகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வரும் நேரத்தில் மதம் சார்ந்த மேலாடைகளை அணிந்து கொண்டு ஊர்வலத்தில் வரக்கூடாது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.