களியல் பேரூராட்சி, பீலிகோடு பகுதியில் ரப்பர் தோட்டம் ஒன்றில் தனியார் பன்றி பண்ணை உள்ளது. இந்த பன்றி பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், பன்றிகளுக்கு கொண்டு செல்லும் கழிவுகளை பறவைகள் தூக்கி சென்று குடிநீர் கிணறுகளில் போடுவதாகவும், துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
மழைக்காலங்களில் கழிவுகள் தேங்கி கொசு தொல்லையும் ஏற்பட்டுவதாக பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு கழிவுகளை ஏற்றிக்கொண்டு இன்று (14-ம் தேதி) வாகனம் ஒன்று வந்தது. இந்த வாகனத்தை அப்பகுதி மக்கள் இன்று சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த களியல் பேரூராட்சி அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதனிடையே பண்ணையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பண்ணை உரிமையாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இரு தினங்களில் பண்ணை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.