பேச்சிப்பாறை அணைப்பகுதியை சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 50 மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. நேற்று இரவு திடீரென சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. இதனால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. சில இடங்களில் மரங்கள் சாலையில் பெயர்ந்து விழுந்தன. இந்த காற்றுக்கு வீடுகளும் தப்பவில்லை. குறிப்பாக பேச்சிப்பாறை அணையின் மறுபக்கம் உள்ள முடவன் பெற்றை, மாங்காய் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரம் மலை கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வேயப்பட்ட தகரம், ஷீட்டுகளினால் ஆன மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்து செல்லப்பட்டன.
இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்தவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் விடிய விடிய தூங்காமலே வீட்டின் வெளியே அமர்ந்திருந்தனர். குறிப்பாக தற்பேறு கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி அலையும் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வருவது வழக்கம். எனவே இரவில் காட்டு மிருகங்கள் வந்துவிடுமோ என்ற பயத்திலேயே பொதுமக்கள் தூங்காமல் பீதியுடன் இரவை கழித்தனர்.
இன்று அதிகாலையில் காற்றின் வேகம் சற்று தணிந்தது. ஆனால் தற்போது மீண்டும் வேகமாக வீசத் தொடங்கியுள்ளதால் இன்று இரவும் தூக்கம் போய் விடுமா என பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.