கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி ஆயன்விளை பகுதியை சேர்ந்தவர் சதாசிவன்(41). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பூங்காவுக்கு அடிக்கடி செல்வார். அங்கு சமாதானபுரத்தை சேர்ந்த ஜினோ மற்றும் அவரது நண்பர் ஒருவர் மணிக்கணக்கில் இருந்து கொண்டு பேசுவது வழக்கம். இதனை சதாசிவன் அடிக்கடி கண்டிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு சதாசிவன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். மேட்டுக்கடை பகுதியில் சென்றபோது பைக்கில் வந்த ஜினோ மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து சதாசிவனை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சதாசிவன் அளித்த புகாரின்பேரில் ஜினோ மற்றும் அவரது நண்பர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.