குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே காட்டுக்கடை பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ செயலப டும் அமுதம் நியாய விலை கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக குமார் (55) என்பவர் உள்ளார். இந்த கடை சம்மந்தமாக ஏற்கனவே பல புகார்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று விற்பனையாளர் குமாரின் மகன் ரேஷன் பொருட்கள் எடை போட்டு விநியோகம் செய்தார். இது தொடர்பாக தகவல் கிடைத்த சூழால் ஊராட்சி தலைவர் இவான்ஸ் என்பவர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழக்குவதை தடுத்து நிறுத்தினார். இதற்கு ஆதரவாக ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலர் பாபு, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களுடன் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரச்னை ஏற்படவே கொல்லங்கோடு போலீசார் வந்தனர். உடனே விற்பனையாளர் மகன் கடையை விட்டு வெளியே சென்றார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரி ஷோபனா குமாரி வந்து
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மகனை வைத்து ரேஷன் பொருட்கள் வழங்கிய விற்பனையாளர் சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.