பாலுார் - கண்டிகை சாலையில் லாரிகளுக்கு நேர கட்டுப்பாடு

68பார்த்தது
பாலுார் - கண்டிகை சாலையில் லாரிகளுக்கு நேர கட்டுப்பாடு
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் பயில்கின்றனர்.

இப்பள்ளி, பாலுார் ரயில்வே கேட் அருகில், கண்டிகை, சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில் உள்ளது. கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் செல்கின்றன. தவிர, தினமும் நூற்றுக்கணக்கான கல் குவாரி லாரிகள் செல்கின்றன.

அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால், இந்த கிராமத்தில் அதிக அளவில் புழுதி பறப்பதாக, கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

மேலும், அதிக பாரம் ஏற்றி செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்து வந்தனர். இது குறித்து, சமீபத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் கிராம மக்களிடையே, செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு நடத்தப்பட்டது.

இதனையடுத்து, பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்லும் காலை 8: 00 மணி முதல் 10: 00 மணி வரையும், மாலை 4: 00 மணிமுதல் 5: 30 மணி வரையும், இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக, பாலுார் போலீசார் அறிவித்துள்ளனர்.

மீறி செல்லும் கனரக வாகனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார்எச்சரித்து உள்ளனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி