காஞ்சிபுரம் கணேசா நகரில், தும்பவனம் மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், 39வது ஆண்டு விழா, நேற்று காலை 7: 00 மணிக்கு வரசக்தி விநாயகருக்கு அபிஷேகத்துடன் துவங்கியது.
காலை 9: 00 மணிக்கு தும்பவனம் மாரியம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், பம்பை, உடுக்கை மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க, பல்வேறு முக்கிய வீதி வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து, அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம் 12: 10 மணிக்கு மூலவர் அம்மனுக்கு மஹாதீபாராதனையும், மாலை 5: 00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வும், இரவு 7: 00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது.
இன்று மாலை 6: 00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 8: 30 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. நாளை காலை 7: 00 மணிக்கு வரசக்தி விநாயகருக்கும், தும்பவனம் மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
காலை 9: 00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12: 00 மணிக்கு கூழ்வார்த்தல் விழாவும், இரவு 7: 00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் தும்பவனம் மாரியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.
இரவு 10: 00 மணிக்கும் கும்பம் படையலிடப்பட்டு, அம்மன் வர்ணிப்பு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கணேசா நகர், எம். பி. டி. , நகர் இளைஞர் அணி, பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.