செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று (செப்.24) நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, கலால் உதவி ஆணையர் ராஜன்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, வண்டலுார் கிராம சிறு விவசாயிகள் நல சங்கத்தினர், கலெக்டரிடம் அளித்த மனு வருமாறு: வண்டலுாரில், 16 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி, தனியார் ரியல் ஸ்டேட் நிறுவனத்தினர், பாசன கால்வாயை ஆக்கிரமித்து, வீட்டுமனை அமைத்துள்ளனர். இதனால், 50 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசன வசதி தடைபட்டுள்ளது. பாசன கால்வாயை மீட்டு தரவும், ஏரி மதகுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிற்றேரி மற்றும் பெரிய ஏரிகளில், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது விசாரணை செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.