செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இக்கோயிலுக்கு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் தீர ஸ்ரீ தலசயன பெருமாள், நிலமங்கை தாயாரை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு, ஆண்டுதோறும் 10 நாள் பூதத்தாழ்வார் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் திருப்பணி நடைபெற்றதால், பூதத்தாழ்வார் உற்சவம் நடத்தப்படவில்லை.
மேலும், திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், 2 ஆண்டுக்குப் பிறகு 10 நாட்கள் நடைபெறும் பூதத்தாழ்வார் உற்சவம் கடந்த 31ம் தேதி வெகு விமரிசையாக துவங்கியது. தினமும், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா நடந்தது. இந்நிலையில், 9ஆம் நாளான காலை பூதத்தாழ்வார் அவதார தேரோட்டம் நடந்தது. முன்னதாக, 4 மாட வீதிகள் வழியாக தேர் சென்றபோது, அங்கு கூடியிருந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.