கோவில் மலைகளில் குடியிருப்பவர்களுக்கு சதுர அடிக்கணக்கில் வாடகை வசூலிக்கும் முறையை ரத்து செய்து பகுதி முறையை அமல்படுத்த கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோவில் நிலங்களில் குடியிருப்போர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சதுர அடிக்கணக்கில் சந்தை மதிப்பில் வாடகையை நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும். பகுதி முறையை அமல்படுத்த வேண்டும். கலைஞர் போட்ட அரசாணை எண் 298 மற்றும் அரசாணை 456 தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
குறைபாடுகள் உள்ள அரசு ஆணையம் 34 ஏ ஐ ரத்து செய்ய வேண்டும். எந்த நிபந்தனையும் கூறாமல் பெயர் மாற்றம் செய்து தரப்பட வேண்டும். மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றங்களை பொது நீதிமன்றங்களாக மாற்றம் செய்ய வேண்டும். நீண்ட காலமாக குடியிருந்து வருபவர்களுக்கு குடியுரிமை பட்டா வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.