மின்கசிவு காரணமாக தீ விபத்து பல சரக்கு கடை எரிந்து நாசம்

75பார்த்தது
மின்கசிவு காரணமாக தீ விபத்து பல சரக்கு கடை எரிந்து நாசம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, தங்கப்பாபுரம் ராஜாஜி நகரில், செல்வி சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் பரசுராமன், 40.

இவர், அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடையில், ஐந்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்ததும், கடையை அடைத்து விட்டு, அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.

நள்ளிரவு நேரத்தில் கடையில் இருந்த ஐஸ்கிரீம் ப்ரீசர் பாக்ஸில் மின் கசிவு ஏற்பட்டு, புகை வந்துள்ளது. இதை காவலாளி கவனித்து, உடனடியாக பரசுராமனுக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த அவர், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, மறைமலை நகர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினர், கடையில் ஏற்பட்ட தீயை, ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

அதற்குள், கடையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி