பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரி காந்தராய் (42), டிரைவர். ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை கேன்டினில் 'டாடா ஏஸ்' டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி ஏற்றி வர, 'டாடா ஏஸ்' வாகனத்தில் ஒரகடத்தில் இருந்து புறப்பட்டவர், வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் பனப்பாக்கம் அருகே சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடித்தார்.
அப்போது, வாலாஜாபாதில் இருந்து, ஜல்லி கற்கள் ஏற்றி கொண்டு வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த 'டாடா ஏஸ்' வாகனம் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அவ்வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 'டாடா ஏஸ்' ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதே போல, லாரியை ஓட்டிவந்த சென்னை கொளப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார் (35), சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஒரகடம் போலீசார், ஜே. சி. பி. , இயந்திரம் வாயிலாக விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றி, சாலையில்கொட்டிய ஜல்லியைஅகற்றினார். மாலை நேரம் என்பதால், வண்டலுார் வாலாஜாபாத் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.