குருவன்மேடு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

74பார்த்தது
குருவன்மேடு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது. பாலுார் கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர், மாடுகளுக்கு பூச்சி மருந்து, சத்து மருந்து உள்ளிட்டவை வழங்கினார்.


மழைக்காலங்களில் கால்நடை பராமரிப்பு குறித்து, உதவி மருத்துவர் சசிதரன் கூறியதாவது:


மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு குளிர்ந்த நீர் அளிக்கக் கூடாது. அவ்வாறு அளிக்கும் போது, மாடுகளுக்கு வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படும். மிதமான சூட்டில் தண்ணீர் அளிக்க வேண்டும். ஈரப்பதம் அதிகமான காலம் என்பதால், அடர்தீவனங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். காலை நேரங்களில் ஈரமான புற்களை கால்நடைகள் உட்கொள்ளும் போது, நுனிப்புற்களால் குடற்புழுக்கள் உண்டாகும்.


கால் மற்றும் வாய் நோய், தொண்டை அடைப்பான், சப்பை நோய்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்.


மழைக்காலங்களில் ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் சளி நோய்க்கு, திரிகடுகு, சூரணம், துளசி, துாதுவளை இலைகளை ஒரு பிடி கொடுக்க வேண்டும்.


மாடுகளை கொசு, ஈ, தொல்லை இல்லாத இடங்களில் கொட்டகை அமைத்து, பராமரிக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி