உத்திரமேரூர் ஒன்றியம் மலையாங்குளம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வூரில் 10க்கும் மேற்பட்ட குரங்குகள் தஞ்சமடைந்துள்ளன.
இங்கு அடிக்கடி கூட்டமாக வரும் குரங்குகள், வீடு மற்றும் கடைகளில் உள்ள தின்பண்டங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை துாக்கிச் செல்கின்றன.
வீட்டு மாடியில் உள்ள டிவி ஒயர்களை அறுத்து விடுகின்றன. சிறுவர்கள் கையில் எடுத்து செல்லும் பைகளை பறித்துச் செல்கின்றன. இதனால், சிறுவர்கள் சிறு சிறு காயமடைகின்றனர்.
மேலும், வீட்டு தோட்டங்களில் உள்ள வாழை, கொய்யா, மாதுளை, மா பழங்களை தின்றுவிடுவதோடு, செடிகளையும் நாசம் செய்து விடுகின்றன.
இதனால், மின்தடை நேரங்களில் கூட காற்று வாங்க வீட்டு கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க முடியாத நிலை உள்ளதாக கிராமவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, மலையாங்குளம் மக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் குரங்களை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.