மத்திய அரசு ஆகஸ்ட் 7ம் தேதியை, தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது முதல், சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெசவு பணியில் சிறப்பாக பணியாற்றும் நெசவாளர்கள், மத்திய ஜவுளி அமைச்சகத்திடம் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பித்து விருது பெற்று வந்தனர்.
இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வாகியுள்ள நெசவாளர்கள் பட்டியல் விபரங்களை, மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து, சிறந்த நெசவாளர் விருது, காஞ்சிபுரம், திண்டுக்கல் என இரு பகுதியைச் சேர்ந்த இரு நெசவாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணன் என்ற நெசவாளருக்கும், காஞ்சிபுரத்தில், திருவள்ளுவர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த, பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பாலசுப்ரமணியன் என்ற நெசவாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7ம் தேதி, டெல்லியில் நடைபெற உள்ள கைத்தறி தின விழாவில், மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் விருது வழங்க உள்ளார். விருதுடன், தாமிர பத்திரம், சான்றிதழ், 2 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் திருவள்ளுவர் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த நெசவாளர்கள், இந்த விருதை தொடர்ந்து பெற்று வருகின்றனர்.