காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கனரக வாகன ஓட்டுனர்கள், வாகன பயிற்சியாளர்கள், வாகன உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், சாலை விபத்து ஏற்பட்டால் காயமடைந்த நபரை காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் முதலுதவி சிகிச்சை வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து வீடியோ படக்காட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
சாலை விபத்தில் காயமடைந்தவர்களை, 'கோல்டன் ஹவர்' நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே 50 சதவிகித உயிரிழப்பை தவிர்க்கலாம்.
விபத்தில் காயமடைந்தவர்களை எந்த ஒரு தயக்கமின்றி அவர்களைகாப்பாற்ற உதவ வேண்டும். இதனால் எந்த ஒரு பிரச்னையும், காப்பாற்றுவோருக்கு ஏற்படாது.
சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் மயக்க நிலையில் உள்ள போது எவ்வாறு முதலுதவி கொடுக்க வேண்டும். எந்தெந்த வகையில் அவர்களை பரிசோதிக்க வேண்டும்.
குழந்தைகள் அடிப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து செயல்வடிவில் பயிற்சி அளித்தும், அதைத் தொடர்ந்து பொதுமக்களும் தானே செய்துக் கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கினர்.
இதில் வட்டார போக்கு வரத்து அதிகாரிகள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.