காஞ்சிபுரம் மாநகராட்சி, சாத்தான்குட்டை பின்பக்க தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை குவியல் மற்றும் மண் துகள் கழிவுகளால், கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. எனவே, சாத்தான்குட்டை பின்பக்க தெருவில், கால்வாயில் மண்டியுள்ள குப்பை குவியலை முழுமையாக அகற்றி, கழிவுநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.