காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பாலம் கட்ட வேண்டிய தேவை அதிகாக இருந்த இடங்களில், பொன்னேரிக்கரை ரயில்வே கடவுப்பாதை முதன்மையானதாக இருந்தது.
தினமும் ரயில் கடந்து செல்லும் நேரங்களில், பல கி. மீ. , துாரம் வாகனங்கள் அணிவகுந்து நின்றன. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருந்ததால், 50 கோடி ரூபாய் செலவில், புதிய ரயில் நிலையம் அருகே, பொன்னேரிக்கரையில் புதிய மேம்பாலம் கட்டி பயன்பாட்டில் உள்ளது.
அடுத்தபடியாக, காஞ்சிபுரம் கரியன்கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க, தமிழக அரசு அறிவித்து, அரசாணை வெளியிட்டு நான்காண்டுகள் ஆன நிலையில், ரயில்வே துறையும், நெடுஞ்சாலை துறையும் போதிய நடவடிக்கை எடுக்காததால், மேம்பாலம் திட்டம் கிடப்பில் உள்ளது.
காஞ்சிபுரம் - திருத்தணி சாலையில், வெள்ளைகேட் செல்லும் வழியில் உள்ள கரியன்கேட் ரயில்வே கடவுப்பாதை வழியாக அரக்கோணம், திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களுக்கு செல்லவும், அந்த பகுதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வரவும், இந்த சாலையே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரயில்வே கடவுப் பாதையில், ஒவ்வொரு நாளும் ரயில் செல்லும் நேரங்களில், நீண்ட நேரம் வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக இப்பிரச்னை நீடிப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.