செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருநிலம் ஊராட்சியில் ரூபாய் 12.70 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நியாயவிலை கடை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். உடன் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது 3 மணிக்கு வருவதாக தெரிவித்த நிலையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் காலதாமதமாக இரவு 7 மணி அளவில் வருகை புரிந்தார். இதனால் அந்த பகுதியில் திடீரென இருண்ட சூழல் ஏற்பட்ட நிலையில் சாலை ஓரம் இருக்கும் மின்கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக கொக்கி மூலம் மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை எழுப்பியது.