காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி இயங்கி வருகிறது. அரசு உதவிபெறும் இந்த கல்லுாரியில், காலை, மாலை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மாணவியர் சேர்க்கை சமீபத்தில் நடந்தன.
அரசு ஒதுக்கீடு பிரிவில் சேர்ந்த மாணவியருக்கு காலை நேர வகுப்புகளும் மற்றும் கல்லுாரி சுயநிதி பிரிவில் சேர்ந்த மாணவியருக்கு மாலை நேர வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
இதில், கல்லுாரி சுயநிதி பிரிவில், மாலை நேர வகுப்பில், 16 மாணவியர் மட்டுமே இளங்கலை கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர். கூடுதல் மாணவியர் சேர்க்கை இல்லாததால், கல்வி சான்றிதழ் பெற்று செல்லும்படி, மாணவியரிடம், கல்லுாரி நிர்வாகம் சார்பில் வற்புறுத்தி வருகின்றனர்.
ஒரு கல்லுாரியில் சேர்ந்த பின், வேறு கல்லுாரியில் சேர முடியாது என, ஒரு சில மாணவியரின் பெற்றோர் கல்வி சான்றுகளை வாங்க மறுத்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் தலையீட்டு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என, மாணவியரின் பெற்றோர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.