தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், காஞ்சிபுரம் மாவட்டத்தில், அவரது துறை சம்பந்தமான வளர்ச்சி திட்டங்கள் பற்றி ஆய்வு செய்தார். முதலாவதாக, வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆய்வு திட்டத்தின்கீழ், விரிவாக ஆய்வு செய்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நாடகம் நடத்தி வழங்கிய 3, 000 ரூபாய் நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தையும் அமைச்சர் மகேஷ் அங்கு பார்வையிட்டார்.
பள்ளி வளாகத்தில், 20 லட்ச ரூபாய் மதிப்பில், வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணியையும் அவர் பார்வையிட்டார். காலாண்டு விடுமுறையில் பள்ளி வளாகத்தில் நடக்கும் நாட்டு நலப்பணி திட்ட முகாமை பார்வையிட்ட அவர், மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
காஞ்சிபுரத்தில் உள்ள ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அவர், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு' திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தையும், பள்ளி கல்வித் துறை சார்பில் கட்டப்படும் கட்டடங்களையும் பார்வையிட்டார்.
பள்ளி அலுவலக அறையில் அமர்ந்த அவர், இடைநின்ற மாணவர்களின் பெற்றோரை மொபைல்போனில் அழைத்து, இடைநிற்றலுக்கான காரணத்தை கேட்டறிந்தார். மீண்டும் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் உடன் இருந்தனர்.