செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த செங்காட்டூர் கிராமம், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செபாஸ்டின்(66). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, புத்துார் கிராமத்தில் உள்ள தீனா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம்(அக்.2) இரவு வயலில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பிற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், இரவு 12: 30 மணிக்கு, செபாஸ்டின் மகன் உகம்(20) வயலுக்கு சென்று பார்த்தார்.
அப்போது, விவசாய நிலத்தின் மீது சென்ற மின் வயர் அறுந்து, செபாஸ்டின் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து செபாஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து, செய்யூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மின் இணைப்பை துண்டித்து, செபாஸ்டின் உடலை மீட்டனர். பின், வழக்குப்பதிந்து உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, உயிரிழப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.