சென்னை அடுத்த குன்றத்துாரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 25; ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம், குன்றத்துாரில் உள்ள ஆற்காடு பிரியாணி கடையில், இரண்டு பிரியாணி 'பார்சல்' வாங்கியுள்ளார். வீட்டில், இவரது மனைவி ரெபேக்கா, உறவினர்கள் சுகன்யா, மகேஷ், குழந்தைகள் லக்கிஷா, டார்வின் ஆகியோருக்கு, பிரியாணியை பகிர்ந்து கொடுத்துள்ளார். அதை அனைவரும் சாப்பிட்ட போது, அதில் பல்லி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, பிரியாணி கடைக்குச் சென்று ராஜேஷ் கேள்வி எழுப்பினார். இதற்கு, கடை உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜேஷ் மனைவி ரெபேக்கா வாந்தி எடுத்துள்ளார்.
மற்றவர்களுக்கும், லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஷ் அவரது மனைவி, உறவினர்கள் என ஐந்து பேரும், மாங்காடில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து ராஜேஷ், குன்றத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உணவு பாதுகாப்பு துறையினருடன் சென்ற போலீசார், பிரியாணி கடையை ஆய்வு செய்தனர். கடை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகக் கூறிய உணவு பாதுகாப்பு துறையினர், கடையை சீரமைக்க வேண்டுமென்றும், 14 நாட்கள் கடையை திறக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர். மேலும், பள்ளி விழுந்த பிரியாணியை சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.